விவாதத்துக்கு மறுப்பு சொன்ன அண்ணாமலை… என்னதான் நடந்தது இன்றைய செய்தியாளர் சந்திப்பில்?

அண்ணாமலை இன்றைய தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது புதிய தலைமுறை செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் என்னதான் நடந்தது என்பது பற்றி விளக்கம் இங்கே.
பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்திருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “ஏற்கனவே 355 கோடி ரூபாய் நட்டத்தில் பிஜிஆர் நிறுவனம் இயங்கி வரும் நிலையில், அதனுடன் 4472 கோடி ரூபாய் மின்சாரம் கொள்முதல் செய்துக்கொள்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது” எனக் கூறி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரனை ஆணையம் அமைத்து உரிய விசாரனையை நடத்தவேண்டும் என்று கடந்த மார்ச் மாததில் கூறியிருந்தார்.
image
அதற்கு அப்போதே பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “இது ஆதாரமற்ற குற்றசாட்டு. ஆதாரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிடவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதே சமயம் பி.ஜி.ஆர். நிறுவனம் தங்கள் மீது சுமத்தப்பட்ட 26 குற்றசாட்டுகள் குறித்து SIBI க்கு விளக்கம் தந்தனர். இருப்பினும் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து இதுகுறித்து புகார் சொன்னார்.  இந்நிலையில் `தவறான தகவலை சொல்லியிருக்கார்’ என்று அண்ணாமலையிடம் பிஜிஆர் நிறுவனம் நஷ்டஈடு கேட்டது.
இப்படி தொடர்ந்து வந்த இந்த சர்ச்சை தொடர்பாக, இன்று அண்ணாமலையிடம் புதிய தலைமுறை செய்தியாளார் கேள்வி எழுப்பினார். அப்போது அண்ணாமலை, “ஒவ்வொரு முறையும் ஆதாரமில்லாத குற்றசாட்டை நீங்கள் சொல்லிவருகிறீர்கள்” என்றார். பின் அடுத்தடுத்த கேள்விகளுக்கும் புதிய தலைமுறை குறித்தும், புதியதலைமுறை செய்தியாளர் குறித்தும் அவர் ஒருமையில் விமர்சனம் செய்தார்.
image
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக தன்னிடம் உள்ள ஆதாரங்களை தருவதாக அண்ணாமலை புதிய தலைமுறை செய்தியாளரிடம் கூறினார். அவர் அதை சொன்னதையடுத்து, புதிய தலைமுறை செய்தியாளர்கள், செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகும் அங்கேயே காத்திருந்தனர்.
பொது செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின்னர் புதிய தலைமுறை செய்தியாளார்களை அழைத்த அண்ணாமலை, அவரிடம் “நான் ஆதாரங்களை அளிக்கிறேன். ஆனால் விவாதத்திற்கு நான் வரமாட்டேன். எங்களின் செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் தான் வருவார்” என்றார். அதற்கு புதிய தலைமுறை செய்தியாளர், “நீங்கள் தான் வரவேண்டும்” என்று கேட்கவே, “நான் மாநில தலைவர். உங்க சேனல் என்ன அத்தனை பெரிய சேனலா?” என்ற மிகக்கடுமையாக பேசினார்.
image
இதைத்தொடர்ந்து அண்ணாமலையில் உதவியாளர்கள் சிலர் புதிய தலைமுறை ஊழியர்களை வலுகட்டாயமாக பின்வாசல் வழியாக வெளியேற்றி விட்டனர். முன்னதாக அண்ணாமலைதான் “2018ல் கருப்பு பட்டியலில் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்தை அஇஅதிமுக சேர்த்திருக்கவேண்டும்” என்று தெரிவித்தார். ஆனால் இதை அவர் ஏன் கூறினார் என்பது உள்ளிட்ட எந்த வித கேள்விக்கும் இப்போது வரை விளக்கங்கள் கிடைக்கவில்லை.

இன்று காலை நடந்த இச்சம்பவத்தில், அவர் சொன்ன ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை. அண்ணாமலை ஆதாரங்களை வெளியிடும் பட்சத்தில் அதை புதிய தலைமுறை வெளியிடும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.