சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் கருவறை முன் உள்ள கொடிமரத்தில் குஞ்சிதபாத தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றினார்.
இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர். உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளின் தேர்கள் வீதிகளில் வலம் வருகிறது. நடராஜரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 6ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெறும். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜனவரி 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.