சென்னை: தமிழகத்தில் ரூ.15,610 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் 2023-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். ஆளுநரின் உரையில், தமிழக அரசின் சாதனைகள், திட்டங்களின் தொகுப்பு இருக்கும் என்பதால், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத்துகள், திட்டங்கள், தொழில் முதலீடுகள், புதிய தொழில் கொள்கை குறித்தெல்லாம் விவாதித்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில் துறையில் புதிதாக ரூ.15,610.43 கோடி மதிப்பிலான, 8 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 8,776 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
குறிப்பாக, மின்சார வாகனங்கள், மின்கலன் உற்பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் தொழில்நுட்பம், ஜவுளி, ஆக்சிஜன் உற்பத்தி தொழில் பிரிவுகளில் இந்த முதலீடுகள் அமைந்துள்ளன. கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டிய பகுதிகளில் புதிய தொழில்கள் அமையும்.
மேலும், தென் தமிழகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளதால், சுற்றியுள்ள பகுதிகளில் அது தொடர்பான தொழில்களும், கங்கைகொண்டானில் டாடா பவர் திட்டம், தோலில்லாத காலணி உற்பத்தி போன்ற தொழில்களும் அமையும். பரந்தூர் விமான நிலையம் அமையும் பகுதியைச் சுற்றி சில முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் மின்னணு வாகனக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு, சாலை வரி உள்ளிட்ட சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. மின் வாகனங்கள் உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பான தொழில் கொள்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், கூடுதல் செயலர் மரியம் பல்லவி பல்தேவ் உடனிருந்தனர்.