கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, அனைத்து கோயில்கள், முக்கிய இடங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களை, உளவுத்துறையும், என்.ஐ.ஏ-வும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று பெங்களூர் மட்டுமின்றி, தக்ஷின கன்னடா, சிவமோகா, தவகிரியில் உள்ள, ஆறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் பகுதியைச் சேர்ந்த ரெஷான் தஜ்ஜுதின் ஷேக், சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹூசைர் பர்ஹான் பைக் ஆகிய இருவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
‘கிரிப்டோ வாலட்’ நிதி!
இது குறித்து உளவுத்துறை போலீஸாரிடம் பேசினோம். “இருவரை கைதுசெய்து என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், கல்லுாரி நண்பர்களான ரெஷான் தஜ்ஜுதின் ஷேக், ஹூசைர் பர்ஹான் பைக் ஆகிய இருவரும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சில பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர்.

இவர்கள், ரகசிய ‘கிரிப்டோ வாலட்’ மற்றும் ‘டார்க் வெப்சைட்’ வாயிலாக, ஐ.எஸ்.ஐ.எஸ் பயிற்சி பெற்றதுடன், அவர்களிடமிருந்து நிதி பெற்று வந்திருக்கின்றனர். இருவரும் இணைந்து, முக்கிய இடங்கள், மது விற்பனை நிலையம், குடோன் உள்ளிட்ட பகுதிகளில் தீ வைத்து, தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு வந்திருக்கின்றனர். இவர்கள் மீது ஏற்கெனவே சிவமோகா ரூரல் போலீஸ் ஸ்டேஷனில், செப்டம்பரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவர்களது வீட்டில் சில முக்கிய ஆவணங்கள், அதிநவீன ‘டிவைஸ்’ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கர்நாடகா முழுவதிலும் ரெய்டு தொடரும்’’ என்றனர்.