செவலியர்கள் போராட்டம்: சுமுக தீர்வு காண முயற்சி – அமைச்சர் அளித்த நம்பிக்கை!

கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் பணிக் காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பெருநகர சென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சிற்பி திட்டத்தின் கீழ் 100 பள்ளிகளை சார்ந்த 5000 மாணவர்களுக்கு யோகோ பயிற்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்,” செவிலியர்கள் போராட்டத்தை பொறுத்தவரை செவிலியர்கள் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை மாவட்டம் வாரியாக பணியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எந்த ஒரு பணி பாதிப்பும் ஏற்படாமல் அரசு பாதுகாக்கும்.

இதுவரை அவர்கள் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. செவிலியர்களை சிலர் தூண்டி விட்டு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. செவிலியர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். செவிலியர்கள் விவகாரத்தில் சுமுக சூழலை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது” என்று கூறினார்.

மேலும் அவர், “இந்தியாவில் உள்ள மாநகரங்களில் பெண்கள் வாழ பாதுகாப்பானது சென்னை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மாநகர காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநகரம் முழுவதும் சிசிடிவி கண்கானிப்பு, மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் கண்கானிப்பு என இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது சென்னை மாநகரம். சிற்பி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை காவல்துறை தொடங்கியுள்ளது. மனதளவிலும், உடல் நலனிலும், தனிநபர் ஒழுக்கத்தை கற்பிக்கவும் இந்த பயிற்சி உதவும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.