ஹுப்பாளி: நான் இந்துவாக இருக்கும்போது எப்படி இந்து விரோதியாக இருக்க முடியும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். “பிரதமர் மோடியைக் கண்டால் நாயக்குட்டியைப் போல் அஞ்சி நடுங்குபவர்தான் முதல்வர் பசவராஜ் பொம்மை” என கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா விமர்சித்திருந்தது சர்ச்சையான நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார் சித்தராமையா.
இது தொடர்பாக அவர், “நான் ஒரு இந்து. நான் இந்துவாக இருக்கும்போது எப்படி இந்து விரோதியாக இருப்பேன். நான் இந்துத்துவா கொள்கையைத் தான் எதிர்க்கிறேன். இந்து மதத்தின் பேரில் அரசியல் செய்வதை எதிர்க்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தில் அனைத்து மதங்களும் சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நான் அவ்வாறு கூறினேன். என் பேச்சு உண்மையில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. என் நோக்கம் முதல்வரை அவமதிக்க வேண்டுமென்பதில்லை. என்னை டகாரு (ஆடு), ஹுலி (புலி) என்றெல்லாம் அழைக்கிறார்களே. அப்படியென்றால் அதுவும் இழுக்குதானா? மரங்களுடனும், விலங்குகளுடனும் மனிதர்களை ஒப்பிடுவது கர்நாடக கிராமப்புறங்களில் சகஜம். அந்த வகையில் தான் நான் அவ்வாறு முதல்வரை விமர்சித்திருந்தேன்.
நான் ஒருபோதும் ராமர் கோயில் கட்டப்படுவதை எதிர்த்ததிலை. கர்நாடகாவில் கிராமப்புறங்களில் நானே நிறைய ராமர் கோயில்களை கட்டியுள்ளேன். காங்கிரஸ் ஒருபோதும் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை எதிர்த்ததில்லை. நாங்கள் ராமர் கோயிலை அரசியல் ஆதாயத்துக்காகவும் வேறு மதத்தினருக்கு எதிராகவும் பயன்படுத்துவதை தான் எதிர்க்கிறோம். பாஜக ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்கிறது.” என்றார்.
சர்ச்சைப் பேச்சு: முன்னதாக விஜயநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய சித்தராமையா, ”பசவராஜ் பொம்மையும் பாஜகவின் பிற தலைவர்களும் பிரதமர் மோடியைக் கண்டால் நாய்க்குட்டியைப் போல மாறிவிடுவார்கள். நடுக்கத்தோடு நிற்பார்கள். கர்நாடகாவுக்கு சிறப்பு நிதியாக ரூ.5,495 கோடி ஒதுக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியாது என்று கூறிவிட்டார்” என்று பேசியிருந்தார்.
முதல்வர் பதிலடி: சித்தராமையா விமர்சனம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, ”இதுபோன்று பேசுவது அவரது வாடிக்கை. இதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஆனால், நன்றியுணர்வுக்கு அடையாளமாக இருப்பது நாய். நானும் கர்நாடக மக்களுக்கு நன்றியுடன் எனது கடமையை ஆற்றி வருகிறேன். எனவே, அவர்கள் என்னை நாய் என்று குறிப்பிட்டாலும், நான் அதை நேர்மறையாகவே எடுத்துக்கொண்டு மக்கள் பணியாற்றுவேன். காங்கிரஸ் கட்சி செய்வதைப் போல நான் சமூகத்தை பிளவுபடுத்தவில்லை” என்று கூறியிருந்தார்.