வாரிசு Vs துணிவு: எந்த படத்துக்கு அதிக திரையரங்கு ஒதுக்கப்பட்டிருக்கு? கள நிலவரம் இதான்!

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாக இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இரண்டு திரைப்படங்களின் வியாபாரம் குறித்தும், திரையரங்குகள் ஒதுக்கீடு குறித்தும் இந்த கட்டுரையில் காணலாம்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகிய இருவரின் திரைப்படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாள்தோறும் இந்த பொங்கல், வாரிசு பொங்கலா? துணிவு பொங்கலா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

image

நாள்தோறும் ஏதோ ஒரு தலைப்பில் சமூக வலைதளங்களில் இந்த இரண்டு படங்களும் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், இரண்டு படங்களும் வருகின்ற 11 ஆம் தேதி வெளியாக உள்ளது, விஜய், அஜித் நடித்துள்ள திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாகி உள்ளதால் எந்த படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரையுலகிலும் நிலவி வருகிறது.

இந்நிலையில், திரைப்படம் வெளியாகும் முன்பே இரண்டு திரைப்படங்களும் தங்களின் தயாரிப்பு தொகையை விட அதிக வருவாயை ஈட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை விவரமாக இங்கே சொல்கிறோம்…

வாரிசு:

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வாரிசு படம் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் ரிலீஸாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 225 கோடி ரூபாய் என கூறப்பட்டு வருகிறது, இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்தற்கு 125 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.

image

விஜய்யின் வாரிசு படத்தை பொறுத்தவரை இப்படத்தின் தமிழ்நாடு உரிமை மட்டும் சுமார் 70 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. விஜய்க்கு, தமிழ்நாடு தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் அதிகளவிலான ரசிகர் படை இருப்பதால், அங்கும் வாரிசு படம் அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமை 6.5 கோடிக்கும், கர்நாடகா உரிமை 8 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.

அதேபோல் வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமை 35 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதுதவிர வாரிசு படத்தின் இந்தி உரிமை 34 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது, மேலும் இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளது. டிஜிட்டல் உரிமையை பொறுத்தவரை வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை 5 ஆண்டுகளுக்கு மட்டும் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு 75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, அதேபோல் இதன் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி 57 கோடிக்கு வாங்கியுள்ளது.

image

இதன் மூலம் ரிலீசுக்கு முன்பே இப்படம் 295.5 கோடி ரூபாய்க்கு வாரிசு திரைப்படம் விற்பனை ஆகியுள்ளது இப்படம். படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் படத்தை வினியோகம் செய்ய இருப்பதால் விற்பனை செய்யவில்லை. அப்படி விஜய்யின் முந்தைய படத்தின் விலையை வைத்து பார்த்தாலும் 300 கோடி ரூபாயை விஜய்யின் வாரிசு திரைப்படம் குவித்துள்ளது.

துணிவு:

இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்த திரைபடத்தின் மொத்த பட்ஜெட் 160 கோடி ரூபாய் திரைப்படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் – 70 கோடி ரூபாய். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேசமயம், கேரளா உரிமை 2.5 கோடிக்கும், கர்நாடக உரிமை 3.6 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.

image

அதேபோல் இந்தி உரிமை 25 கோடிக்கும், இசை உரிமை 2 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமைகள் 1.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உரிமையை பொறுத்தவரை இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.65 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேபோல் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி 25 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் 14 கோடிக்கு வாங்கி இருக்கிறது.

இப்படி பார்த்தால் இந்த படம் 193.60 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

இப்படியாக, இரண்டு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களும் வெளியாக உள்ளதால் எந்த திரைப்படத்திற்கு திரையரங்கில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற சர்ச்சை தொடர்ச்சியாக எழுந்த வந்த நிலையில், இரண்டு திரைப்படங்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் இரண்டு திரைப்படங்களுக்கும் அதிகபட்சமாக 5 சதவீதம் அளவிலான வேறுபாடு மட்டுமே திரையரங்குகளில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு சுமுகமாக முடிவடைந்துள்ளது என்று திரைவாட்டரங்களில் உள்ள நபர்கள் தெரிவிக்கின்றனர்.

image

திரைத்துறை வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா இதுபற்றி பேசுகையில், “லவ் டுடே போல ஒருசில சின்ன படங்கள் வசூலை வாரிக்குவித்து அதிசயங்கள் நடந்தாலும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்கள் படத்தின் மூலமே திரையரங்குகளில் பெரிய வருமானம் கிடைக்கும் என்பதால் இரண்டு படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.