புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுவதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு குறைபாடு காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் ஒத்திவைக்க பட்டிருந்தது.
இதை அடுத்து உரிய முன்னேற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை அங்கு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் தடுப்புகள், மேடை சரிசெய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும் 300காளையர்களும் பங்கேற்க இருப்பதாக விழா குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.