திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலிருக்கும் அடியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் திருப்பதி. 45 வயதான இவர், கட்டடத் தொழில் செய்துவந்தார். இந்த நிலையில், திருப்பதி நேற்றைய தினம் தாமலேரிமுத்தூர் மேம்பாலப் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையின்போது, திருப்பதி தனது தற்கொலைக்கான காரணம் குறித்து வீடியோ ஒன்றை பதிவுசெய்து, சமூக வலைதளங்களிலும் அதனை வெளியிட்டிருப்பது போலீஸாரின் கவனத்துக்கு வந்தது.
அந்தக் காணொளியில், ‘‘நான் வாங்காத காசுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திட்டாங்க. பெரியமூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மோகன்-மோகனா இருவரும் ஒருமுறை என்னை அக்ரகாரம் ஊசிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த சிங்காரம் என்பவரது வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. நான் ஒரு ‘இ.பி ஆபீஸர்’ என்று சிங்காரத்திடம் எனக்கே தெரியாமல் சொல்லி வெச்சிருக்கிறாங்க. அப்புறம் நான் அங்கிருந்து வந்துட்டேன். கொஞ்ச நாள்ல சிங்காரம், அவர் மனைவி செல்வி, மகன் விக்னேஷ் மூணுபேரும் எனக்கு போன் பண்ணி மிரட்டுனாங்க.
அவங்க வீட்டுக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போன மோகன்-மோகனா தம்பதி ரெண்டுப்பேரும் சேர்ந்து ‘என் பெயரைச்சொல்லி’ ரூ.85,000 கடன் வாங்கியதாகவும், அந்தப் பணத்தை உடனே திருப்பித் தரணும்னு சொன்னாங்க. நான் ஒரு ரூபாய்க்கூட அவங்கக்கிட்ட கடன் வாங்கலை. ஆனா, என்கிட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புல கார் இருக்கு; மூணு மாடி மெத்தை வீடு இருக்குனு சொல்லி கடன் வாங்கிக்கிட்டுப் போனதா சொல்றாங்க. என்கிட்ட எதுவுமே கிடையாது.
காலைல 6 மணிக்கு வேலைக்குப் போனா, சாயிங்காலம் 6 மணிக்குத்தான் வீட்டுக்கே வர்றேன். என் செல்போன்ல ஆதாரத்தை வெச்சிருக்கிறேன். பணம் கேட்டு என்னை மிரட்டுறாங்க. வண்டியை பிடுங்கி வெச்சிக்கிட்டாங்க. காவல்துறை அதிகாரிங்கதான் நடவடிக்கை எடுக்கணும். ஊர்மக்களிடம் நான் நல்லவன் என்ற உண்மையைச் சொல்லணும். எனக்கு சாக பயமா இருந்தாலும் ஊருக்கு உண்மைத் தெரியணும்’’ என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தக் காணொளியை வைத்து, திருப்பதியிடம் பணம் கேட்டு மிரட்டிவந்த 5 நபர்களைப் பிடித்து ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.