அரூர் : பொங்கல் பண்டிகையையொட்டி புளுதியூர் சந்தையில் ₹2 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது. மேலும் மாடுகளுக்கான கயிறு, மணி உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை அதிகரித்தது.தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள், கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடுகள், கோழி உள்ளிட்டவற்றை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள், விவசாயிகளும் வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஒரு மாடு ₹8,900 முதல் ₹60,300 வரையும், ஆடு ₹6,600 முதல் ₹18,000 வரை விற்பனையானது. மொத்தம் ₹2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நாட்டு மாடு ₹40 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. மேலும், மாடுகளுக்கான வண்ணக்கயிறுகள், சலங்கைகள் மற்றும் மூக்கணாங்கயிறுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பொங்கல் பண்டிகை எதிரொலியாக, நேற்று ₹2 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.