சென்னை: தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளதாகவும், அதிமுக ஆட்சியைவிட குறைவாகவே கடன் பெறப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில் சட்டம் – ஒழுங்கு மற்றும் கடன் தொடர்பான எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது முதல்வர் கூறுகையில, “சட்டம் – ஒழுங்கு குறித்து இம்மாமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அதனை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது.
மதக் கலவரங்கள் நடந்துள்ளதா? சாதிக் கலவரங்கள் நடந்துள்ளதா? சொல்லுங்கள். பொது மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடதுள்ளதா? அப்பாவி உயிர்கள் பறிபோனதா? நெஞ்சை உலுக்கக்கூடிய பொள்ளாச்சி சம்பவமும், மர்மத்தின் உச்சமாய் விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய கொடநாடு கொலைகளும், கொள்ளைகளும் யாருடைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தன என்பதை மக்களும் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்காவது நடந்த குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையா? சொல்லுங்கள். காவல் துறை அவர்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. அதைச் சொல்லாமல், நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றங்களைப் பேசுவதால் என்ன பயன்?
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்டிட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அரசின் சீரிய நடவடிக்கைகளினால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதன் காரணமாகவே, பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டினைத் தேடி வந்து இங்கே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. எந்தவொரு வன்முறையும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும்.
எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது, அதிமுக ஆட்சியைவிட, திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மேலும் அதிகக் கடன் வாங்கியுள்ளதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். இது முற்றிலும் தவறான தகவல்.
அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டான 2020-2021ம் ஆண்டில், 83,275 கோடி ரூபாய் நிகரக் கடனாக பெறப்பட்டது. நன்றாக கவனிக்க வேண்டும். 2020-2021 ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டில், 83,275 கோடி ரூபாய் நிகரக் கடனாக பெறப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றபோதிலும், என்னுடைய திறமையான நிர்வாகத்தினால், 2021-2022 ஆம் ஆண்டில் பெறப்பட்ட நிகரக் கடனை, 79,303 கோடி ரூபாயாக குறைத்திருக்கிறோம்.
அதாவது, முந்தைய ஆண்டைக் காட்டிலும், சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிற்குக் குறைவாகவே கடன் பெறப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். வாசிக்க > அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 3 அறிவிப்புகள்