திருவெறும்பூர்: திருச்சி ஈவெரா சாலை கஸ்தூரிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அர்ஜுன்(20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் திருச்சி தென்னூர் வயலூர் ரோடு பகுதியை சேர்ந்த பஷீர் அகமது மகன் ஷிமர் அகமத் (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோ சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மதுரையில் இருந்து திருச்சி நோக்கி இருவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். திருச்சி மணிகண்டம் எரக்குடி பிரிவு சாலை அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. பின்னர் அதே வேகத்தில் எதிர் சாலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் வந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சுற்றுலா பஸ் டிரைவர் சுலை குமரன் (60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.