சேலம்: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களையும், குப்பையில்லா நகரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி திடலில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நேற்று தொடங்கியது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தின் அனைத்து நகரங்களையும் குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தூர், சட்டீஸ்கர் ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டு, அங்கு பின்பற்றப்படும் நடவடிக்கைகளை இங்கு செயல்படுத்த உள்ளோம். இதன் மூலம் அடுத்த ஓராண்டில், மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக கல் வெட்டி எடுக்கப்பட்டு, தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகத்தை மூடும் திட்டம் எதுவும் இல்லை. தேவையை விட கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தியதால், சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, சுழற்சி அடிப்படையில் அவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.