Indian Army Day: இந்திய ராணுவ தினம்! நாட்டையும் காக்கும் வீரர்களுக்கு சல்யூட்

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார். சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.

ஏன் ஜனவாி 15 அன்று கொண்டாடப்படுகிறது?
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு இந்தியா தனது 75வது இராணுவ தினத்தைக் கொண்டாடுகிறது. இராணுவ வீரா்களை மாியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
பொதுவாக இந்திய இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தினம் கொண்டாடப்படும். அங்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக சிறப்பு இராணுவ அணிவகுப்பு, ஏாியல் போா் பயிற்சிகள் மற்றும் இருசக்கர வாகனங்களால் செய்யப்படும் பிரமீடுகளின் அணிவகுப்பு போன்ற மனங்களை கொள்ளை கொள்ளும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அந்தவகையில் இந்த ஆண்டும் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு கமாண்டின் மேற்பார்வையில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 2023ஆம் ஆண்டுக்கு முன்பு டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா பரேட் மைதானத்தில் ராணுவ தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்நாளில், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காக்கும் போது, உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கிறது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய ராணுவ சக்தியாகத் திகழும் இந்திய ராணுவம் 1.3 மில்லியன் வீரர்களுடன் நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துவருகின்றது. தரைப்படை, கடற்படை, விமானப்படை என நாட்டின் முப்படைகளுக்கும் குடியரசுத் தலைவரே தலைமைக் கமாண்டராக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ராணுவ தினம்: ராணுவ வீரர்களுக்கு மோடி வாழ்த்து

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது: “இராணுவ தினத்தில், அனைத்து இராணுவ வீரர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு இந்தியனும் நமது ராணுவத்தைப் பற்றி பெருமிதம் கொள்கின்றனர், நமது வீரர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்போம்” என்று பதிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.