கற்பனைக் கதை இல்லாத பண்பாட்டு பெருவிழா: முதல்வர் ஸ்டாலின் காணொலியில் பொங்கல் வாழ்த்து 

சென்னை: “கற்பனைக் கதை இல்லாத பண்பாட்டு பெருவிழா. வானம் பொழிந்தது, பூமி செழித்தது என்றில்லாமல், வானம் கொடுத்தது, பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான் நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவது மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலியில், “தாய்தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழர் திருநாள் இது. பொங்கல் திருநாள் இது. உழவர் திருநாள் இது. உழவை தலையென வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாள். மண்ணையே உரத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த வேட்டைச் சமுகம் நம்முடையது.

இனம், மண்,மக்கள், விளைச்சல், உணவு, மற்ற உயிரினங்கள் இவை அனைத்துக்குகும் சேர்த்து கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா. கற்பனைக் கதை இல்லாத பண்பாட்டு பெருவிழா. வானம் பொழிந்தது, பூமி செழித்தது என்றில்லாமல், வானம் கொடுத்தது, பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான் நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம். புதுப்பானையில் புத்தரிசி போட்டு புத்தொலி ஊட்டி உள்ளங்களில் பொங்கும் உணர்ச்சியால் அடுப்புமூட்டி பானைக்கு மேலே வழிந்தோடும் அன்பு நுரையானது நாடு முழுக்க அனைவர் வீடுகளிலும் பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.


— M.K.Stalin (@mkstalin) January 15, 2023

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதனால்தான் இந்த தை மாதத்தை தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம், இலக்கியத் திருவிழா, கலைத் திருவிழா, நம்ம ஊர் திருவிழா , ஏறு தழுவுதல் இப்படி தை மாதம் முழுக்கவே தமிழ் மாதமாகவே தமிழர் மாதமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மத வேறுபாடுகள், சாதிய பாகுபாடுகள், இவை எவையும் இல்லாமல் தமிழர்கள் அனைவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பெருவிழாதான் பொங்கல் விழா.

துன்பங்கள் துடைக்கப்பட்டு இன்பம் பொங்கட்டும். வருத்தங்கள் போக்கி மகிழ்ச்சி பொங்கட்டும். வேறுபாடுகள் களைந்து ஒற்றுமை பொங்கட்டும். மாறுபாடுகள் விலகி சமதர்மம் பொஙகட்டும். உழைப்பை வணங்குவோம். உழைப்பவரை வணங்குவோம். வேளாண்மையை வணங்குவோம். விளைவிக்கும் உழவரை வணங்குவோம். மனிதர்களுடன் சேர்த்து பல்லுயிரையும் வணங்குவோம். மண்ணை வணங்குவோம். மண்ணின் வளத்தை எந்நாளும் காப்போம். இயற்கையை வணங்குவோம். இயற்கை மனிதர்களாக எந்நாளும் நடப்போம். தாய்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.