ஓமான் நாட்டிற்கு தொழிலுக்காக சென்று, அங்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட மேலும் 14 பெண்கள், ஓமான் இலங்கை தூதரகத்தின் சுரக்ஷா இல்லத்தில் இருந்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் இன்று (16) அதிகாலை 5 மணியளவில் ஓமான் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து ருடு206 என்ற இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 7 பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளனர் , 7 பேர் சுற்றுலா விசாவில் சென்று சட்டவிரோதமான முறையில் தொழில் புரிந்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் ,சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களை அழைத்து வருவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பணம் செலவிட, சட்ட ஏற்பாடுகள் இல்லாத போதிலும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவையின் விசேட அனுமதி ஒன்றின் ஊடாக இவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவர்களில் 5 பேருக்கு அவர்களது வீடுகளுக்குச் செல்வதற்கான பயணச் செலவுகளை வழங்குவதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, தனது உறவினர்களை அல்லது நண்பர்களை சந்திப்பதற்கு செல்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகளிடம் போலித் தகவல்களை வழங்கி சென்றிருந்தால், அவர்களுக்கும் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பியவர்கiளுக்கும் எதிராக, வெளிநாட்டு வேலைவாயடப்பு பணியகம் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை, இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர், விமான நிலையத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுவரையிலும் ஓமான் சுரக்ஷா இல்லத்தில் இருந்து 32 பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.