தமிழக சட்டப்பேரவை கடந்த ஜனவரி 9ம் தேதி தொடங்கிய போது தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆளுநர் உரையை தமிழக ஆளுநர் ரவி சில பகுதிகளை நீக்கியும் சேர்த்தும் படித்திருந்தார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை படித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழக ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் திமுகவின் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவதூறாக தகாத வார்த்தைகளால் பேசி இருந்தார். குறிப்பாக “தமிழக ஆளுநர் நீ காஷ்மீர் எல்லைக்கு போ நானே தீவிரவாதிகளை அனுப்பி உன்னை சுட்டுத் தள்ளுகிறேன்” என திமுக பேச்சாளர் பேசியிருந்தார். இதனை அடுத்து ஆளுநர் மாளிகையின் செயலாளர் பிரசன்னா சென்னை காவல்துறை ஆணையரங்கத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் மீது தமிழக காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக ஆளுநரை ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படவில்லை. இதனால் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் அவர் சார்ந்த இயக்கத்திற்கும் தீவிரவாத இயக்கங்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய அரசு அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது மத்திய பாதுகாப்பு படையினர் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய தமிழக ஆளுநரை தீவிரவாதிகளை கொண்டு சுட்டு வீழ்த்துவேன் என திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட புகாரின் மீது தமிழக காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மத்திய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கில் தலையிட காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூடிய விரைவில் திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது மத்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.