மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் இன்று கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின ஓபிஎஸ். இபிஎஸ் அணியினர், அமமுக நிர்வாகிகள், அம்மா பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் எம்ஜிஆர் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நடப்பது திமுக ஆட்சியாக இருந்தாலும், சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு அமைச்சர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுபோன்ற வழக்கமான நிகழ்வுகளுக்கு மத்தியில், சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு அரசியல் அரங்கில் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஒருவர். அவர் வேறு யாருமில்லை… தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு பரிச்சயமான பாஜக முன்னாள் தலைவரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தான்.
தமிழிசை தமது கணவர் சௌந்தரராஜனுடன் வந்து மரியாதை செலுத்தினார். மாற்று கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருப்பது அதிமுக தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளதுடன், அரசியல் அரங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அத்துடன்,கூட்டணி கட்சியாக இருந்தாலும் தமிழக பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் இன்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக தெரியவில்லை. மாற்று கட்சித் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் மரபு பாஜக உள்பட பொதுவாக எந்த கட்சியிலும் இருப்பதாக தெரியவில்லை. இந்த மரபுக்கு மாறாக, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், எம்ஜிஆர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எம்ஜிஆர் மீது தமிழிசைக்கு இருக்கும் பற்றுதான் இதற்கு காரணம் என்றும், அவரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தவர் எம்ஜிஆர் என்பதால், அவர் மறைந்தாலும் அவர் மீது இன்றும் தமிழிசைக்கு மரியாதை இருப்பதாகவும் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழிசை -சௌந்தரராஜன் திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரும், முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியும் தலைமை ஏற்று நடத்தி வைத்தனர். அந்த விழாவில் ” பெண் பார்ப்பதற்கு சிறியவராக இருந்தாலும், அவரது பார்வை மிகவும் பரந்துபட்டதாக தெரிகிறது. எனவே அவரது வளர்ச்சிக்கு சௌந்தரராஜன் எப்போதும் தடையாக இருக்கக்கடாது”என்று எம்ஜிஆர் பேசியதை, தமக்கு நெருக்கமானவர்களுடன் இன்றும் பசுமை மாறாமல் நினைவுகூர்ந்து வருகிறாராம் தமிழிசை. இதன் காரணமாகவே அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு, எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளாராம்.
கூடவே எம்ஜிஆரின் மீதான மரியாதையின் காரணமாகவே, அவர் ஆரம்பித்த கட்சி என்பதால், அதிமுகவின்ர் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று இபிஎஸ். ஓபிஎஸ்ஸுக்கு மறைமுகமாக அறிவுரையும் அளித்துள்ளாராம் தமிழிசை.