'ஜோஷிமத் விவகாரத்தில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?' – மம்தா பானர்ஜி கேள்வி!

“ஜோஷிமத் விவகாரத்தில் மத்திய அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்து உள்ளது. புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது. இமயமலையையொட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காகக் கூடிய இடங்களை கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டடங்களின் சுவர்களில் திடீர், திடீரென விரிசல் விட தொடங்கியது. இது தவிர, தரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்தது. ஜோஷிமத் நகருக்கு அருகேயுள்ள கிராமங்களில் இதே போன்ற நிலை காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஜோஷிமத் நகரில் விரிசல் விட்ட ஓட்டல்கள் மற்றும் வீடுகளை இடிப்பது என அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இது பற்றி அரசு நிர்வாகம் தனியாக குழு அமைத்து செயல்படுத்தி வருவதுடன், இஸ்ரோ, ஐ.ஐ.டி. அமைப்புகளுடன் இணைந்து இந்த விரிசலுக்கான காரணம் பற்றி ஆய்வும் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கொல்கத்தாவில், மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னரே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் மத்திய அரசு முன்கூட்டியே இது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நாங்கள் ராணிகஞ்ச் இடத்தில் இதே பிரச்னையை எதிர்கொள்கிறோம். ராணிகஞ்சில் நிலக்கரி இந்தியா நிறுவனத்தால் இதே பிரச்சனை உள்ளது. இதனால் 30,000 பேர் பாதிக்கப்படுவார்கள். ஜோஷிமத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜோஷிமத் நகரில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் அபாயமானது. இதற்கு எந்த வகையிலும் அங்குள்ள மக்கள் பொறுப்பாக முடியாது. பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

நீதித் துறையின் சுதந்திரத்தை நாங்கள் விரும்புகிறோம். கொலிஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதித்துவம் இருந்தால், மாநில அரசும் தங்கள் பிரதிநிதிகளை கொலிஜியத்தில் சேர்க்கும். ஆனால் மாநில அரசின் பரிந்துரைகளுக்கு எந்த மதிப்பும் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.