செம்பட்டி அருகே வெடிவிபத்து தம்பதி உள்பட 3 பேர் பலி: உடல்களை தேடும் பணி தீவிரம்

சின்னாளபட்டி: செம்பட்டி அருகே பட்டாசு விபத்தில் கட்டிடம் தரைமட்டமாகி தம்பதி பலியாயினர். 3 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. உடல்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வீரக்கல் ஊராட்சியை சேர்ந்தவர் ஜெயராமன் (48). திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர். இவர் மனைவி நாகராணி (32) மற்றும் 7, 5 வயதுகளில் 2 மகள்கள் மற்றும் 4 வயதில் ஒரு மகனுடன் செம்பட்டி – வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டி கண்மாய் அருகே தனியார் வணிக வளாகத்தை வாடகைக்கு எடுத்து மேல்தளத்தில் வசித்துள்ளார். கீழ் தளத்தில் 5 கடைகள் உள்ளன. 5 கடைகளிலும் பட்டாசுகள், வாண வேடிக்கை ரக பட்டாசுகள் உள்ளன.

நேற்று மாலை 5.20 மணியளவில் ஜெயராமனின் குழந்தைகள் மூவரும் வணிகம் வளாகம் முன்பு காலி இடத்தில் விளையாடி கொண்டிருந்தனர். வீட்டில் ஜெயராம், அவரது மனைவி நாகராணி மற்றும் பணியாட்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதும், 3 கட்டிடங்களும் இடிந்து தரை மட்டமானது. மேலும் கட்டிடத்தை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களும் சேதமடைந்தன. கட்டிடத்தின் கீழே பட்டாசு கடை முன்பு நின்று கொண்டிருந்த மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தகவலறிந்ததும் திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் போலீசார் சென்று விசாரித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து கட்டிடத்தின் மேல் பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து பட்டாசுகளை வெடிக்காமல் செய்தனர். கட்டிடத்தின் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கி இருக்கும் நபர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் இடிபாடுகளை அகற்ற முடியவில்லை. அவற்றை அப்புறப்படுத்திய பின்பு தான் உயிர் சேதம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர். ஜெயராமனுடன், அவரது மனைவி நாகராணி, பெண் பணியாளர் ஒருவர் என மூன்று பேர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.