`தமிழ்நாட்டை தமிழகம் என சொன்னது ஏன்?’ ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்த பரபரப்பு அறிக்கை!

தமிழகம் – தமிழ்நாடு என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் குறிப்பிட்டிருப்பவை:

“2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் `ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழா’வில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

image
எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின்  பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என்றுள்ளார்.
முன்னதாக `தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே சரி’ என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, அவர் உரையை தொடங்கியதும் `தமிழ்நாடு வாழ்க’ என திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அவையில் குழப்பம் ஏற்பட்டது. எனினும், ஆளுநர் தனது உரையை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினார்.
image
அதே நேரம் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் `தமிழ்நாடு… தமிழ்நாடு…’ என முழக்கமிட்டவாரே வெளிநடப்பு செய்தன. இந்நிலையில் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாக திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்தன. குறிப்பாக, தமிழ்நாடு என்பதை தவிர்க்க TAMILNADU GOVERNMENT என்பதை THIS GOVERNMENT என மாற்றி படித்துள்ளார் ஆளுநர் என சொல்லப்பட்டது.
இக்குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் “தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை.ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து, நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். எங்கள் கொள்கைக்கு மாறாக மட்டுமல்ல; அரசின் கொள்கைக்கு மாறாகவும் ஆளுநர் நடந்துகொண்டார். அரசு தயாரித்த, அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது வருந்தத்தக்கது. அச்சிடப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில உரைகள் மட்டுமே அவைக்குறிப்பில் ஏற வேண்டும்” என்றார்.
இவ்விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் – தமிழ்நாடு குறித்த சர்ச்சை வெடித்தது. அதையொட்டியே தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் மேற்குறிப்பிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.