இந்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷல் படங்களாக அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விஜய் – அஜித் படங்கள் ஒன்றாக வெளியானதால், ரசிகர்கள் யாரின் படம் அதிக வசூல் பெறுகிறது என்பதை தினமும் கவனித்து வருகின்றனர். அடுத்த வாரத்துக்குள் எந்தப் படம் அதிக வசூல் பெற்றுள்ளது என்பது தெரிந்துவிடும். இப்போது வாரிசு 210 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியானது. அதே போல துணிவு படமும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து உருவான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோல துணிவு படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்து முடித்துள்ள அஜித், முதல்முறையாக விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். ஏகே 62 படத்தின் ஷூட் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தின் நாயகி யார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த லிஸ்ட்டில் காஜல், ஐஸ்வர்யா ராய், நயந்தாரா, திரிஷா என பலரது பெயர்கள் அடிபடுகிறது. விரைவில் யார் யாரெல்லாம் ஏகே 62-வில் இணைவார்கள் என்பது தெரிந்துவிடும்.
மறுபுறம் தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. சமீபத்திய பேட்டியில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அப்டேட் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்தப்படத்தில் திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித் நடிக்கும் ஏகே 62 படமும், விஜய் நடிக்கும் தளபதி 67 படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதேபோல அடுத்த மாதம் ஷூட்டை தொடங்கும் ஏகே 62 படக்குழுவும் தீபாவளியை டார்கெட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒன்றாக இந்த இரு படங்களும் தீபாவளிக்கு வெளியானால், ரசிகர்களுக்கு செம சரவெடு காத்திருக்கிறது.