இஸ்லாமாபாத், :பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சீர்குலைவு, உணவு மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு, மிகவும் நம்பிய சீனா கைவிட்டது என, பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளதால், வேறு வழியில்லாமல் நம் நாட்டின் உதவியைக் கோர அந்நாடு முடிவு செய்துள்ளது. இதற்காகவே, ‘இந்தியாவுடன் ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த வேண்டும்’ என, அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்பின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘இந்தியா மீது மூன்று முறை போர் தொடுத்து, நாங்கள் சரியான பாடம் கற்றுக் கொண்டோம்.
‘இந்த போர்கள், எங்கள் மக்களுக்கு வறுமை, துன்பத்தை கொண்டு வந்து சேர்த்து விட்டன. இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம்’ என குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்த, பாகிஸ்தான் அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது அந்நாட்டில் கோதுமை, அரிசி, காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களுடன், அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு உள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவிடம் இருந்து இவற்றை வாங்கு வதே சரியான தீர்வாக, ஒரே வாய்ப்பாக உள்ளதாக பாகிஸ்தான் அரசு கருதுகிறது. இதையடுத்தே, பாகிஸ்தான் பிரதமர் அவ் வாறு பேசியுள்ள தாக கூறப்படுகிறது.
இது குறித்து நிபுணர்கள் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதன் அன்னியச் செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகி உள்ளது.
நிபந்தனை விதிப்பு
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு, வெளிநாடுகளில் வாங்கிய கடனை திருப்பி தருவதற்கு மட்டுமே கையிருப்பு உள்ளது.
பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்காக பாகிஸ்தான், மேற்காசிய நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியாவிடம், ௩௨ ஆயிரம் கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில், பாகிஸ்தான் தன் வெளியுறவு கொள்கையை மாற்றிக் கொள்ள வேண் டும் என, அந்நாடுகள் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இந்தியாவுக்கு வலுவான நட்புறவு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளன.
இதற்கிடையே, ராணுவத்துக்கான பட்ஜெட்டையும் பாகிஸ்தான் குறைத்துள்ளது. ஆனால், இலங்கையைப் போல, இந்த பட்ஜெட்டை மேலும் குறைத்தால் உதவுவது குறித்து ஆராய்வதாக பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
ஏற்கனவே ஆப்கானிஸ் தான் எல்லையில் பயங்கரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இந் நிலையில், இந்தியாவுடன் ராணுவ ரீதியில் எந்தப் பிரச்னையில் ஈடுபட்டாலும், அது ஆபத்தாகி விடும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது.
கடந்தாண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் உணவுப் பொருள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரிசி, கோதுமை, காய்கறி போன்றவற்றுக்கு மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது.
பாராமுகமாக உள்ளது
அன்னியச் செலாவணி போதிய அளவில் கையிருப்பு இல்லாததால், மற்ற நாடுகளில் இருந்து வாங்க முடியவில்லை. இதற்கிடையே, சீனாவுடனான உறவும் கசந்து வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பிரச்னைகளில் சீனா பாராமுகமாக உள்ளது.
இந்த சூழ்நிலைகளில் அண்டை நாடான இந்தியாவிடமிருந்து உதவிகளைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இதுவே, ஷெபாஸ் ஷெரீபின் பேச்சுக்கு முக்கிய காரணமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாக்.,கிற்கு எதிரான தீர்மானம்
பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க பார்லிமென்டில் புதிய தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘நேட்டோ’ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பைச் சாராத முக்கிய கூட்டாளி என்ற ராணுவ அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளது.’இந்த அந்தஸ்தை, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து, நிபந்தனையின் அடிப்படையில் அளிக்க வேண்டும்’ என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்