'வருந்தத்தக்க நிலையில் உலகம்' – ஐநா பொதுச்செயலாளர் கவலை!

உலகம் பல முனைகளிலும் தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்து உள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்து வருகிறது. அதில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நமது உலகம் பல முனைகளில் புயலால் பீடிக்கப்பட்டது போல் தொடர் பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. முதலில், குறுகிய கால சர்வதேச பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. உலகின் பல பகுதிகள், பொருளாதார பின்னடைவை சந்தித்தன. ஒட்டுமொத்த உலகமும் மந்தநிலையை சந்தித்து வருகிறது.

கொரோனா தொற்று, இன்னும் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. எதிர்கால பெருந்தொற்றுகளை சந்திக்க தயாராக உலகம் தவறி விட்டது. நாம் தாங்கிக் கொண்ட போதிலும், கொரோனாவில் இருந்து பாடம் கற்கவில்லை. வரவிருக்கும் பெருந்தொற்றுகளுக்கு சிறிதளவு கூட தயாராகவில்லை.

வெப்பநிலை அதிகரிப்பு பருவநிலை மாற்றமும் ஏற்கனவே சவாலாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் திகிலூட்டக்கூடிய பருவநிலை மாற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் சாதனை அளவை தாண்டிக் கொண்டிருக்கிறது. அதனால், வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்து விட்டது. இதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

அமெரிக்காவின் மாகாண ஆளுநராக முதல் இந்தியர் பதவியேற்பு

பூமியின் பெரும்பாலான பகுதிகள், வாழத்தகுதியற்றதாக ஆகிவிடும். பலருக்கு இது ஒரு மரண தண்டனையாக இருக்கும். பாதிப்பை கட்டுப்படுத்தலாம். புதைபடிம எரிபொருளுக்கு அடிமை ஆவதை நிறுத்த வேண்டும். இது இயற்கைக்கு எதிரானது. இத்துடன், வன்முறை, போர் ஆகியவையும் சவால்களாக உள்ளன. இவையெல்லாம், சங்கிலித் தொடர் விபத்தில் கார்கள் ஒன்றின் மீது ஒன்று குவிவதுபோல் உள்ளன.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது கடினம். இருப்பினும், பாதிப்பை கட்டுப்படுத்தலாம். அதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டிய தருணம் வந்து விட்டது. பருவநிலை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.