தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி:
பிரதமர் மோடி செயல்படுத்திய திட்டங்களால், குஜராத்தில் பா.ஜ., மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்திய ஒற்றுமை பயணம் முடிந்த பின், ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவார். அனைத்து தரப்பு மக்களிடமும் செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி உள்ளார். உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் பின்னடவை சந்தித்து வரும் இந்த காலகட்டத்தில், வளரும் நாடுகள் வளர்ச்சி விகிதத்தில், 10வது இடத்தில் இருந்து, ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது.
நாட்டின் முன்னேற்றத்தில், பிரதமர் மோடியின் பங்களிப்பை யாரும் மறுக்கவே முடியாது… அது சரி… ‘இந்தியாவை விட்டு போயிடுவேன்’னு உங்க காதுல வந்து ராகுல் சொன்னாரா என்ன?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
சத்துணவு கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முட்டைகள், கடைகளில் விற்கப்படுவது கண்டனத்துக்கு உரியது. குழந்தைகளின் உணவில் ஊழல் செய்யும் கேவலமான நிலை தான் திராவிட மாடல் ஆட்சியா? சில ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு, சத்துணவு கூடத்தில் பணிபுரிய, பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும் ரகசியம் இது தானா?

‘ஆப்டர் ஆல்’ 5 ரூபாய் முட்டையிலயே இப்படி முடிச்சவிக்கித்தனம் பண்றாங்களே… இதுல, மாணவர்களுக்கு கோழிக்கறி வேற போட்டா, என்ன கோக்குமாக்கு பண்ணுவாங்களோ?
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர், ஜி.மயில்சாமி அறிக்கை:
அடையாறு, கூவம் ஆறுகளின் நீர் மாதிரி சேகரிக்கப்பட்ட, 41 இடங்களில், எங்குமே கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை. அதாவது, இங்குள்ள நீர், எந்த வகை உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளது என, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், நீர் பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பகிங்ஹாம் கால்வாயின் நிலையும் ஏறக்குறைய இதே தான். சிங்கார சென்னை திட்டங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்த போதும், எந்த மாற்றமும் நிகழவில்லை.
‘சிங்கார சென்னை 2.0’ என, பிரமாதமா திட்டம் எல்லாம் போட்டாங்களே… அதுக்கு ஒதுக்கிய நிதி எல்லாம் எங்க போனது?
தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி:
தமிழகம் முழுதும், 234 சட்டசபை தொகுதி களிலும், கவர்னர் ரவிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ரவி என்ற தனி மனிதருக்கு எதிரான போராட்டம் அல்ல. காங்கிரஸ் எந்த மதத்திற்கும் ஆதரவானதும் அல்ல; எதிரானதும் அல்ல. கவர்னர் தற்போது விளக்க அறிக்கை வாயிலாக பதுங்குகிறார். கவர்னருக்கு எதிரான, எங்கள் போராட்டம் தொடரும்.

இப்படி போராட்டம் அது, இதுன்னு நேரத்தை வீணடிக்கிறதுக்கு பதிலா, நீங்களும் தமிழகத்தில் கட்சியை வளர்க்க ஒரு யாத்திரை நடத்தினா என்ன?
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் அறிக்கை:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இந்திய அளவில், மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் கவனத்தை கவரும் வகையில் பாராட்டுகளையும், சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ள முன்னோடி திட்டம். இத்திட்டத்துக்கு சிறப்பு நிதியாக, 681.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இதுவரை, 407.06 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வைக்கும் குற்றச்சாட்டு, பணியாளர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்னா, எல்லாத்தையும் எதிர்த்துட்டு தான் இருப்பார்… யாரும், எந்த குறையும் சொல்லாத வகையில் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் வழியை பாருங்க!
தி.மு.க.,வில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை:
பழநி கோவிலில் வரும், 26ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோவிலில் சுண்ணாம்பு அடிப்பது முதல் கோபுர கலசம் வைப்பது வரை, அனைத்து விதமான பணிகளுக்கும் பொதுமக்கள் உபயம் செய்துள்ளனர்.
ஆனால், கும்பாபிஷேகத்தன்று, 2,000 பேருக்கு மட்டும் அனுமதி. ‘ஆன்லைன் புக்கிங்’ என, அதே பொதுமக்கள் கோவிலுக்கு வரக்கூடாது என, அறமற்ற நிலையத் துறை தடுக்கிறது. உண்டியலில் பணம் போடும் ஒரு ஏழை பாமரன், ஆன்லைனில் பதிய முடியுமா? பாமரனின் பணம் வேண்டும். ஆனால், அவன் கோவிலுக்கு வரக்கூடாது என்பது சமத்துவமா?
கும்பாபிஷேகம்னா லட்சக்கணக்கான மக்கள் கூடுவாங்களே… கூட்டத்தை எப்படி சமாளிப்பது… பழநி மலை என்ன, பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் கணக்கில் பரந்து விரிந்தா கிடக்கு?
தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை தலைவர் சவுந்தர்ராஜன் ராஜா அறிக்கை:
வணிகர்கள் பிரச்னை சம்பந்தமாக, வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து, அரசு பேச்சு நடத்தும் போதும், கருத்து கேட்கும் போதும், எவ்வித பாரபட்சமின்றி, அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளையும் அழைத்து பேச வேண்டும் என, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
அதெப்படி அழைப்பாங்க… கேள்வி கேட்கிறவங்களையும், கோரிக்கை வைக்கிறவங்களையும் தான் அரசுக்கு பிடிக்காதே… ‘ஜிங் ஜாக்’ போடும் சங்கங்களுக்கு மட்டும் தான் அழைப்பு வரும்!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில், ஐந்து தனியார் பால் நிறுவனங்கள், தங்களின் பால் விலையை லிட்டருக்கு, 2 ரூபாய் உயர்த்தியுள்ளன. ஓராண்டில் தனியார் பால் விலை உயர்த்தப்படுவது, இது ஐந்தாவது முறை. தமிழகத்தின் ஒட்டு மொத்த பால் சந்தையில், 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் உள்ளன. அவை கூட்டணி அமைத்து, நிர்ணயிப்பது தான் பால் விலை என்றாகி விட்டது. தனியார் நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆவின் பால் கொள்முதலை அதிகரித்து, போட்டியை ஏற்படுத்தினால், அவங்க தானா வழிக்கு வருவாங்க… அதுக்கு ஆவின் நேர்மையாக இருக்கணுமே!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்