மரம் ஏறும் எந்திரத்தின் உதவியுடன் 70 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் உச்சிக்கு சென்றவர், நிலை தடுமாறி விழுந்து தலைகீழாக தொங்கிய நிலையில் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்….
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அடுத்த வெள்ளத்துவல் பகுதியில் உள்ள சுமார் 70 அடி உயர தென்னை மரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயன் என்பவர் மரம் ஏறும் எந்திரத்தை பயன்படுத்தி தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறினார்
அவர் மரத்தின் உச்சிக்கு சென்று தேங்காய் நெட்டிகளை பறித்து வீசியபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே சாய்ந்தார். எந்திரம் மரத்தோடு இணைக்கப்பட்ட நிலையில் அவரது கால் வசமாக சிக்கிக் கொண்டதால் ஜெயன் தலைகீழாக தொங்கி உயிருக்கு போராடினார்…
அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினரை வரவழைத்தனர். ஏணி மூலமாக மரத்தில் ஏறிய தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சிறுத்தையை பிடிக்க பயன்படுத்தும் வலையை போட்டு ஜெயனை மீட்டு கீழே இறக்கினார்.
வலையோடு கீழே பத்திரமாக இறக்கப்பட்ட ஜெயனை கீழே இருந்த மக்கள் தாங்கிப்பிடித்தனர். நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய ஜெயன் தீயணைப்புத் துறையினர் தக்க நேரத்தில் மீட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மீட்கப்பட்ட ஜெயன் சிகிச்சைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மரம் ஏறும் தொழிலாளர்களின் சிரமத்தை குறைக்க மரம் ஏறும் எந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும் , அதனை பயன் படுத்துவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இல்லையென்றால், இது போல விபரீதங்கள் நிகழ்ந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மீட்புக்குழுவினர்.