புதுடில்லி,தலைநகர் புதுடில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டதால், கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
புதுடில்லியில் நேற்று மதியம், 2:28க்கு நில அதிர்வு ஏற்பட்டது; இந்த நில அதிர்வு புதுடில்லி மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் மற்றும் உ.பி., மாநிலத்தின் நொய்டாவிலும் உணரப்பட்டது.
இதனால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இந்த காட்சிகளை பலர், ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி திறந்த வெளிகளில் கூடினர். அலுவலகங்களில் இருந்தவர்களும் வேகமாக அங்கிருந்து வெளியேறி சாலைகளில் திரண்டனர். ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது.
பொதுமக்களிடையே பதற்றமும், பீதியும் நிலவியது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்த நிலநடுக்கம், நம் அண்டை நாடான நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. அதன் தாக்கம் தான், புதுடில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வாக உணரப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வால் புதுடில்லியில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
நேபாளத்தில் ஒருவர் பலி
நம் அண்டை நாடான நேபாளத்தின் மேற்கு பகுதியை மையமாக வைத்து நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 5.9 ஆக பதிவானது.
கவுமுல் என்ற இடத்தில் நிலநடுக்கம் காரணமாக, பாறை சரிந்து விழுந்ததில், 35 வயது பெண் ஒருவர் பலியானார்.
பஜுரா மற்றும் பஜ்ஹாங் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு காரணமாக 40க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்