ஆட்குறைப்பில் அமெரிக்க நிறுவனங்கள்… சிக்கலை சந்திக்கும் இந்தியர்கள் – கவனிக்குமா மோடி அரசு?!

கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா (பேஸ்புக்), அமேசான், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிவந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், அமெரிக்காவில் பணிபுரிவதற்கான விசா காலம் இருப்பதால், அதுவரை அங்கு பணிபுரிவதற்காக புதிய வேலைவாய்ப்புகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

வேலையிழப்பு

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் பெரும்பணக்காரரான எலன் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கினார். வாங்கி கையோடு, செலவுக் குறைப்பு என்ற பெயரில் அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அவர் மேற்கொண்டார். அதனால், அந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

அதைத் தொடர்ந்து சமூக ஊடக நிறுவனமான மெட்டா (ஃபேஸ்புக்), இணைய வணிக நிறுவனமான அமேசான், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.பி உள்பட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் ஆட்குறைப்பு நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2.21 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில், அமெரிக்காவில் மட்டும் 1.22 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுபவர்கள். மற்றவர்கள் பல்வேறு நாடுகளில் இருக்கும் கிளை நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.டி துறையில் அதிகரிக்கும் வேலையிழப்பு

10,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஏ-வான சத்யா நாதெல்லா அறிவித்திருந்தார். இது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் ஐந்து சதவிகிதம். பேஸ்புக், அமேசான் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய மூன்றாவது நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் இருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக், அமேசான் போன்ற நிறுவனங்களிலிருந்து 2,00,000 ஐ.டி பணியாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். அவர்களில் 30 – 40 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் H-1B மற்றும் L1 விசா பெற்றவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. H-1B மற்றும் L1 விசா பெற்றவர்கள் வேலையிழந்த 60 நாள்களுக்கு புதிய வேலையில் சேர்ந்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். அப்படி 60 நாள்களுக்குள் புதிய வேலையில் சேராவிட்டால், அவர்கள் வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்படும் அபாயம் இருக்கிறது.

மாதிரி படம்

ஆனால், தற்போதைய நெருக்கடியாக சூழலில், குறுகிய காலத்துக்குள் புதிய வேலை கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதில் என்ன கொடுமையென்றால், மூன்று மாதங்களுக்கு முன்பாக, ஆறு மாதங்களுக்கு முன்பாக அமெரிக்கா சென்று வேலையில் இணைந்த இந்தியர்கள் சிலருக்கும் வேலை பறிபோயிருக்கிறது.

இதில், குடும்பமாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பணியாளர்களுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய வேலையில் சேர முடியாமல் இந்தியா திரும்ப வேண்டிய நெருக்கடி ஏற்பட்டால், சொந்த வீடு வைத்திருப்பவர்களால் திடீரென வீட்டை விற்க முடியாது. அதேபோல, குழந்தைகளின் படிப்பை பாதியில் விட வேண்டிய துயரம் ஏற்படும் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

வேலையிழப்பு அச்சத்தில் ஐடி ஊழியர்கள்!

ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையிழந்த பணியாளர்களும், வேலை பறிபோய்விடலாம் என்ற அச்சத்தில் இருக்கும் பணியாளர்களும் தங்களின் H-1B, L1 விசாக்களை வேறு வகையான விசாவாக மாற்றுவதற்கு சட்டரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடு ஆகியவற்றால் தொழில்களும், வணிகமும் முடங்கி, கடுமையான பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. அதன் காரணமாக, தற்போது உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. இதை ஒரு சாக்காக வைத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்று தொழிற்சங்கத்தினர் தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில்தான், ‘ஐ.டி துறையில் ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். மத்திய அரசு, இந்திய சூழலை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்திருக்கிறார். கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து வரும் பிரதமர் மோடி, வேலை இழப்பு விவகாரத்தில் தலையிடுவாரா? அமெரிக்காவில் சிக்கலை சந்திக்கும் இந்தியர்களுக்கு அந்நாடு அரசிடம் பேசி, உதவிகள் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.