புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படி எந்த ஆபத்தான தகவல்களையும் கொலீஜியம் வெளியிடவில்லை என்றும், பின்னர் ஏன் சட்ட அமைச்சர் பதற்றம் அடைகிறார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட மூன்று நபர்கள் குறித்த ஐ.பி, ரா உளவு பிரிவுகளின் அறிக்கையை கொலீஜியம் பகிர்ந்து கொண்டதற்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏன் கோபப்பட வேண்டும்? கொலீஜியம் அந்த நபர்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கும் விஷயங்களையோ, நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விஷயங்களையோ பகிரவில்லை. பரிந்துரைக்கப்பட்டவர்கள் எந்த அடிப்படையில் நீதிபதிகளாகும் தகுதியை இழந்துள்ளனர் என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதியாக இருக்க தகுதி படைத்தவர் என கொலீஜியம் தீர்மானித்து பரிந்துரைத்தவர்களை முற்றிலும் தன்னிச்சையான, பொருத்தமற்ற காரணத்தால் மத்திய அரசு ஏன் நிராகரித்தது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரைகளில் சில பெயர்களை மத்திய அரசு நிராகரித்தது. மீண்டும் அதே பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பெயர்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பதற்கான ஐ.பி, ரா ஆகிய உளவு அமைப்புகள் கொடுத்த அறிக்கைகள் கொலீஜியத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இந்நிலையில், கொலீஜியம் கடந்த வாரம் வெளியிட்ட தனது தீர்மானத்தில் இந்த அறிக்கைகளின் பகுதிகளை குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், ஐபி மற்றும் ராவின் அறிக்கையின் பகுதி பொதுவெளிக்கு வந்தது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”ஐபி, ரா ஆகிய உளவு அமைப்புகளின் ரகசிய அறிக்கைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பொதுவெளியில் பகிர்ந்தது கவலை அளிக்கிறது. இது மிகப் பெரிய கவலை அளிக்கக் கூடிய விஷயம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.