அதானியின் சொத்து மதிப்பு சரிவு :சலசலப்பை ஏற்படுத்திய அமெரிக்க ஆய்வறிக்கை| Gautam Adanis property collapse: US report that caused a stir

புதுடில்லி :அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான, ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம், ‘அதானி’ குழுமம் குறித்து, பாதகமான அம்சங்களுடன் கூடிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டதை அடுத்து, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிவைக் கண்டது.
கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில், 49 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் அளவுக்கு சரிவு கண்டு, அதிர்வலையை ஏற்படுத்தி
உள்ளது.

நான்காவது இடம்

அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, நான்கு மாதங்களுக்கு முன், உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவரது சொத்து மதிப்பில், 49 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து, நான்காவது இடத்துக்கு இறங்கினார்.
‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ்’ பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த ஜெப் பெசோஸ் மூன்றாவது இடத்துக்கு மாறினார். இருப்பினும், புதன்கிழமை நிலவரப்படி, கவுதம் அதானி மூன்றாவது இடத்துக்கு மீண்டார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பெர்னார்டு அர்னால்ட் உள்ளார். இரண்டாவது இடத்தில் எலான் மஸ்க்கும், மூன்றாவது இடத்தில் கவுதம் அதானியும், நான்காவது இடத்தில் ஜெப் பெசோசும் தற்போது உள்ளனர்.

குற்றச்சாட்டுகள்

ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழும நிறுவனங்கள் குறித்த தன்னுடைய இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில், கார்ப்பரேட் முறைகேடுகள் குறித்த பரவலான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. குறிப்பாக சந்தையை தவறாக கையாண்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களின் பங்குகள் கடுமையான விலை சரிவைக் கண்டன. இதன் தொடர்ச்சியாக, கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிவைக் கண்டது.

அதிர்வலை

latest tamil news

தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டவும், உலகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் ‘அதானி எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை, சந்தையில் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில் ‘கிரெடிட்சைட்ஸ்’ நிறுவனம், அதானி குழுமத்தின் கடன் நிலை குறித்து அறிக்கையை வெளியிட்டு, சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியது நினைவு
கூரத்தக்கது.இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் தெரிவித்துள்ளதாவது:
எங்களை தொடர்புகொள்ள எந்தவித முயற்சியும் எடுக்காமல் வெளிவந்திருக்கும் இந்த அறிக்கையை பார்த்து, அதிர்ச்சிஅடைந்துள்ளோம்.இந்த அறிக்கையானது, இந்தியாவின் உயர் நீதிமன்றங்களால் சோதிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட தவறான தகவல்கள் மற்றும் பழமையான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.
இவை ஆதாரமற்ற, ஒருதலைப்பட்சமான, பங்குவர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான குற்றச்சாட்டுகள் ஆகும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.