போளூர்: போளூரில் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துநிலைய நிழற்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போளூர் பேருந்து நிலையம் பலஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் தற்போது வாகன பெருக்கத்திற்கு சிறிய பேருந்தாகவே உள்ளது. பேருந்து நிலையத்தின் இரண்டு புறமும் கடைகளும், ஒரு புறம் நிழற்குடையும் மற்றொரு புறம் ஆக்கிரமிப்புகளும் என்கிற நிலையில் அமைந்துள்ளது.
பேருந்து நிலையத்தில் இடமில்லததால் வேலூர், வந்தவாசி, ஆரணி பகுதியிலிருந்து வரும் பஸ்கள் பேருந்து நிலையம் எதிரே நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. பயணிகளின் வசதிக்காக கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு நிழற்கூடம் அமைக்கப்பட்டது. முதலில் பேருந்துகள் உள்ளே சென்று செல்லுமாறு அமைக்கப்பட்டது. பின்னர் நிழற்கூடம் பயணிகள் அமர நாற்காலி அமைக்கப்பட்டு வசதி ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் நிழற்கூடத்தின் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் நிழற்கூடத்திற்கு முன்னதாகவே நடுரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலை முகப்பு வரை நின்று போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் நிழற்கூடத்தில் உடைந்து போன நாற்காலிகள் மாற்றப்படாமலும் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் நிழற்கூடத்தில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் சமூக விரோத சக்திகள் புழங்கும் இடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறிய அவலம் தொடர்கிறது.
பேருந்து நிலைய பகுதி முழுவதும் ஏதாவது ஒரு பேனர் முளைத்து கொண்டே இருக்கிறது. அதிலும் நிழற்கூடத்தின் சுற்றி பேனர் வைக்கும் போக்கு அதிகமாகவே உள்ளது. பேனர்கள் நிழற்கூடத்தில் கட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அனுமதியில்லாமல் தான் பெரும் பாலான பேனர்கள் வைக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகளால் பேனர் வைக்கப்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது கேள்வி குறியாகவே உள்ளது.
பேருந்து நிலையத்தின் அருகில் காவல்துறை சேவை மையம் உள்ளது. பொதுமக்களுக்கு பிரச்சனை என்றால் உடனடியாக அழைத்து விசாரணை செய்யப்படுகிறது. இருப்பினும் மையத்தை சுற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு தற்போதைக்கு இலவச இரு சக்கர வாகனங்கள் நிறுத்தமாக மாறியுள்ளது. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்புறம் பேனர்கள் வைக்கப்பட்டும், பழைய பொருட்கள் போட்டு வைக்கும் கிடங்காகவும் மாறியுள்ளது.
போளூர் பேருந்து நிலைய பகுதிகள் சீராக காவல்துறை அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கபடாமல் இருக்க நிழற்கூடம் முன்பு பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். நிழற்கூடம் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரம் காக்கப்பட வேண்டும். நிழற்கூடத்தில் அனைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு இருள் சூழ்ந்து இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
இரவு நேரத்தில் நிழற்கூடத்தின் மின் விளக்குகள் முழுவதும் எரிய வேண்டும். காவல்துறை புறக்காவல் சேவை மையத்தில் 24 மணி நேரமும் காவலர்கள் இருக்க வேண்டும். மையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்களை அகற்ற வேண்டும். அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்புறம் உள்ள பேனர்கள் அகற்றப்பட்டு சுகாதாரம் காணப்பட வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.