இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழா இன்று (26) கொண்டாடப்படுகின்றது.
குடியரசு தினத்தையொட்டி இன்று டெல்லி கடமையின் (முன்பு ராஜபாதை) பாதையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, இந்திய எல்லை அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைப்பார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்படும். ஜனாதிபதி கொடி ஏற்றி கொடி வணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கும். பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து அணிவகுப்பு, கடமையின் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக், இந்தியா எல்லை வழியாக செங்கோட்டை வரை செல்லவுள்ளது.
இந்த ஆண்டு அணிவகுப்பில் இடம்பெறும் அம்சங்கள் நாட்டின் உள்நாட்டு திறன்கள், பெண் சக்தி, இராணுவ வலிமை, பன்முகத்தன்மை போன்றவற்றை பிரதிபலிக்கும். இராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரைப்படை மட்டுமின்றி ஒட்டகப்படையும் இடம்பெறுகிறது.
கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்கிறார்கள். முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொள்வார்கள். விமானப்படையில் 4 அதிகாரிகளுடன் 148 வீரர்கள் அணி வகுக்கிறார்கள். 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் பங்கேற்கின்றன. நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். அணிவகுப்பின் இறுதியாக வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மோட்டார் சைக்கிள் மற்றும் விமான சாகசங்கள்; நடைபெறவுள்ளது. விமான சாகசத்தில் 45 விமானங்கள், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியரசு தின விழாவை பாதுகாப்பாக நடத்தி முடித்திட டெல்லியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில போக்குவரத்து வழிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.