கமுதி அருகே உள்ள கிராமத்தில் இருந்து அமெரிக்காவுக்கு பறக்கும் 200 டன் சம்பா மிளகாய்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் என்பவர் தனது தோட்டத்தில் இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, வண்ண பூச்சி ஒட்டிகளை பயன்படுத்தி வருகிறார். இவரது வயலில் விளையும் சம்பா மிளகாயை தொடர்ந்து 5 வருடங்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன்படி இந்த வருடம் இயற்கை விவசாயம் மூலம் இவரது தோட்டத்தில் விளைந்துவரும் சம்பா மிளகாயை, கொள்முதல் செய்வதற்கு அமெரிக்காவில் இருந்து வந்த இருவர், நேரடியாக தோட்டத்தில் இறங்கி ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.

அவர்களுக்கு விவசாயி ராமர் தலைமையில் கிராமத்து பொதுமக்கள் குழவை இட்டு, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதன்பிறகு இந்த வருடம் 200 டன் சம்பா மிளகாய், இப்பகுதியில் உள்ள 20 கிராமங்களில் இருந்து, கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கூறினார். இதன்பின்னர் கமுதி விவசாய கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் மிளகாயை ரகம் வாரியாக தரம் பிரித்து, சுத்தம் செய்து, பாதுகாத்து வைக்கப்படும் குடோனை வெளிநாட்டினர் பார்வையிட்டனர்.

இந்த பணியின் போது, கூட்டுறவு விற்பனை சங்க பொதுமேலாளர் போஸ், இயற்கை விவசாயி ராமர், சஸ்அக்ரி டெவலப்மென்ட் கம்பெனியின் தலைமை இயக்குதல் அதிகாரி சௌவுரப், கொள்முதல் மேலாளர் சஞ்ஜெய், ஜோசப்ராஜ், கள ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.