மாற்று சமுகத்தவரை திருமணம் செய்த பெண்ணை கணவர் முன்னே தரதரவென தூக்கிச் சென்ற கொடூரம்!

தென்காசி அருகே மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் பெண் வீட்டார் மணமகன் கண் முன்னே மணமகளை தூக்கிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்த வினித் என்பவர், அதே பகுதியில் உள்ள மற்றொரு சமூகத்தை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருமே, ஒரே பள்ளியில் பயின்ற நிலையில் பள்ளியிலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படும் இவர்கள், கன்னியாகுமாரியில் 27 ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

image
இந்நிலையில், கடந்த 04.01.2023 அன்று பெண்ணை காணவில்லை என பெண் வீட்டார் தரப்பில் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வினித் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரையும் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் மேஜர் என்பதாலும், கிருத்திகா வினித்துடன் வாழ விரும்புவதாகவும் கூறியதால் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் வீட்டாரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வினித், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார். அதனடிப்படையில் வினித் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் நேற்று விசாரணைக்காக காவல் நிலையம் சென்றுள்ளனர்.

image
ஆனால்,  நீண்ட நேரம் காத்திருந்தும் பெண் வீட்டார் தரப்பிலிருந்து யாரும் வராததால் இனிமே இயல்பாக வெளியே செல்லலாம் என கருதியுள்ளனர். இதனால், வினித்தும் கிருத்திகாவும் சாப்பிட்டுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் குத்துக்கல் வலசை என்ற பகுதி அருகே காரில் சென்ற போது, பெண் வீட்டார் அவர்கள் சென்ற காரை வழிமறித்து கிருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்திச் தூக்கிச் செல்ல முயற்சித்துள்ளனர். கிருத்திகா அருகே உள்ள ஷாமில்லுக்குள் ஓடி தப்பிக்க முயன்றுள்ளார். அங்கு சென்று பெண் வீட்டார் கிருத்திகாவை தரதரவென தூக்கிச் சென்றனர். அதன்  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பெண்ணை, கணவன் கண்முன்னேயே தூக்கிச் சென்ற பெண் வீட்டார் #Tenkasi | #lovemarriage | #InterCasteMarriage | #CCTV pic.twitter.com/StuHv6su14
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 26, 2023

காதல் திருமணம் செய்த காரணத்துக்காக, பெண்ணை தரதரவென குண்டுக்கட்டாக சிலர் தூக்கிச்செல்லும் காட்சி, காண்போரையும் பதைபதைக்க வைத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.