ஜூடோ ரத்தினம்: ரஜினியின் `பாயும் புலி' படத்தை ஜூடோவுக்காகவே எடுத்தோம் – எஸ்.பி.முத்துராமன்

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ஃபைட் மாஸ்டராக கோலோச்சிய ஜூடோ ரத்தினம் இன்று மாலை காலமானார். தொடர்ந்து 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம்.

`தாமரைக்குளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘கொஞ்சும் குமரி’ படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் ஆனார்.

அதிலும் ஏ.வி.எம். நிறுவனத்தின் ஆஸ்தான மாஸ்டர். ரஜினி, கமல் என டாப் ஹீரோக்களை ஆக்‌ஷன் ஹீரோக்களாக்கியது இவரின் கைவண்ணம்தான். இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் 45 படங்களுக்கும் மேல் பணியாற்றி சாதனை படைத்தவர் என்பதால், ஜூடோவின் நினைவலைகளை இங்கே பகிர்கிறார் எஸ்.பி.எம்.

முரட்டுக்காளை

”ஏவிஎம் தயாரிப்பில் எனது இயக்கத்தில் 45 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய பெருமை ஜூடோ ரத்தினத்திற்கு உண்டு. இப்போ அவர் குடியாத்தத்தில் வசித்து வந்தாலும், அவருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தேன். அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வரும்போதெல்லாம் என்னை வந்து சந்திப்பார். எஸ்.பி.எம். டீமில் முக்கியமான ஆள் அவர்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

சண்டைக்காட்சியில் வித்தியாசமான கம்போஸிங்கை வைப்பார். ஒவ்வொரு ஃபைட்டும் வித்தியாசமா இருக்கணும் என்பதற்காகவே நிறைய மெனக்கிடுவார். ‘முரட்டுக்காளை’யில் ரஜினி சாரும் ஜெய்சங்கரும் சண்டையிடும் டிரெயின் ஃபைட் அவ்ளோ யதார்த்தமாக அமைந்தது போல் இருக்கும். அப்போது எந்த கிராபிக்ஸும் கிடையாது. எல்லாமே மேனுவல். அதிலேயே ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் எல்லாமே அசத்தலா பண்ணியிருப்பார்.

அதேபோல கமல் சாரின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’யில் ஹெலிகாப்டரில் குரூப் ஃபைட் வச்சிருப்பார். வித்தியாசமான சண்டைக் காட்சியா அப்போ அது பேசப்பட்டது. அதிலும் கமல் சிலம்பு சுத்தும் காட்சி ரொம்பவே பேசப்பட்டது.

குடியாத்தம் வீட்டில் ஜூடோ ரத்தினம்

ரஜினி சாரின் ‘பாயும் புலி’ ஜூடோ சாருக்காகவே எடுத்த படம். ஒவ்வொரு ஃபைட்டும் ஒவ்வொரு ஆயுதங்கள் வச்சு சண்டையிடுவார் ரஜினி. கத்திச் சண்டை, கம்புச்சண்டைனு அதில் ஆக்‌ஷன் தூக்கலா இருக்கும். ரஜினி எல்லா ஃபைட்டும் பண்ணுவார்னு அவருக்கு அப்போ ஒரு பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘பாயும் புலி’

‘போக்கிரி ராஜா’வில் நடிகராகவும் ஒரு காட்சியில் வருவார் ஜூடோ. சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் ஃபைட் மாஸ்ட்களில் பலரும் அவரிடம் இருந்து வந்தவர்கள்தான். சூப்பர் சுப்பராயன், ராமுனு நிறைய பேரைச் சொல்லலாம்.

இப்படி என்னோட டீமில் தூணாக இருந்தவரை இழந்திருக்கோம் அருமையான மனிதர். மனிதாபிமானமிக்கவர். கம்யூனிஸவாதி. அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கார். அதன் பெயர் ‘லெனின் திருமண மண்டபம்’.

குடியாத்தத்தில் உள்ள அவரது உடலை நாளை காலை சென்னைக்குக் கொண்டு வர்றாங்க. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்டண்ட் யூனியன்ல அவரது உடல் வைக்கப்படுகிறது. காலை ஏழு மணியில் இருந்து ஒரு மணி வரை உடல் அங்கிருக்கும். அதன்பிறகு நல்லடக்கம் நடைபெறும்” என்கிறார் எஸ்.பி.எம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.