அமமுக வேட்பாளர் அறிவிப்பு: இளைஞரை களமிறக்கிய டிடிவி தினகரன்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்றும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றையே தினமே முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் அமமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. அக்கட்சியின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவப்பிரசாத் போட்டியிடுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “அமமுக தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு உள்ள வலுவான கட்சி. ஈரோடு கிழக்கிலும் நாங்கள் பலமாக இருக்கிறோம். இந்த இடைத்தேர்தலில் எங்கள் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் சிவபிராத் என்ற இளைஞரை வேட்பாளராக நிறுத்துகிறோம்.

மெகா தேர்தல் பணிக்குழு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளோம். ஞாயிற்றுக் கிழமை முதல் தேர்தல் பணியை ஆற்ற உள்ளோம். பிப்ரவரி 3ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளோம். சில கட்சிகளிடம் பேசி வருகிறோம், சிலரது ஆதரவை கேட்க உள்ளோம். கடந்த முறை எங்கள் கூட்டணியில் இடம்பெற தேமுதிக தேர்தலுக்குப் பின்னர் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினர். தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள். இருப்பினும் அவர்களிடமும் பேசுவோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்றதை போல் இந்த தேர்தலில் அமமுக வெற்றி பெறும்.

அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினால் சின்னம் முடக்கப்படும், அதுதான் கடந்த கால அனுபவம். 2017இல் நான் போட்டியிட்ட போது சின்னம் முடக்கப்பட்டு எனக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டது. மதுசூதனன் அணிக்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டது. எனவே இம்முறையும் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது.

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோருகிறார். எனவே அவர் எங்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டால் சட்ட ரீதியாக பின்னடைவு ஏற்படுமா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.