மோடி – பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை: சென்னை பல்கலை.க்கு எஸ்எஃப்ஐ கண்டனம்

சென்னை: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதித்த சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எஸ்எஃப்ஐ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநிலச் தலைவர் கோ.அரவிந்தசாமி மற்றும் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச ஊடகமான பிபிசி 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையை அடிப்படையாக வைத்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்திருந்தது.

தற்போதைய உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து இந்த ஆவணப்படம் தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது. எனவேதான் மத்திய அரசு இந்நிகழ்ச்சியை இந்தியாவில் ஒளிபரப்ப தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வருகிறது. ஆனால், பிபிசி இந்த ஆவண படத்தை அனைவரும் பார்க்கும் வகையில் கூகுள் இணையத்தில் வெளியிட்டது. அதனை இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கல்வி வளாகங்களில் உள்ள மாணவர்களும் மற்றும் பொதுமக்களும், இளைஞர்களும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த 26-ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியில் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் ஆவணப்படத்தை பார்த்துள்ளனர். இன்று (ஜன. 27 ) சென்னை பல்கலைக்கழகத்தில் ஆவணப்படத்தை திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் கிளை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் இந்நிகழ்விற்கு தடை விதித்துள்ளது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. மேலும் இது அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19-க்கு எதிரானதாகும்.

மாணவர்கள் இந்நிகழ்வை பல்கலைக்கழகத்தில் உள்ள எந்த ஒரு வகுப்பறையிலையோ அல்லது அரங்கத்திலோ பார்க்க ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் மாணவர்கள் தங்களது மடிக்கணினி மூலமாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் ஒருதலைபட்சமாக ஆர்எஸ்எஸ் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டு மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக கிளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்விற்கு தடை விதித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். மாணவர்களின் ஜனநாயக நடவடிக்கையை தடை விதிக்கும் இத்தகைய நிகழ்வை இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு கண்டிக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.