திருப்பதி தேவஸ்தானம் மொபைல் ஆப்: இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் போதும். ஏதாவது வேண்டுதல் இருந்தாலும் சரி. திருமலைக்கு புறப்பட்டு சென்று மொட்டை போட்டு வந்துவிடுவர். கூடவே அந்த லட்டு. யாராலும் மிஸ் பண்ண முடியாத ஒரு பிரசாதம். அப்படியே நான்கு மாட வீதிகள் மற்றும் திருமலையின் ரம்மியமான சூழலை அங்கேயே சில நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தால் மிகவும் பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும்.

தேவஸ்தானம் அறிமுகம்

இவை அனைத்தையும் பெறும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மொபைல் பயனாளர்களை கவரும் வகையில் புதிதாக ஒரு ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ பிளாட்பார்ஸ் லிமிடெட் உடன் கைகோர்த்து இந்த ஆப்பை தயாரித்துள்ளனர்.

மொபைல் ஆப்

திருமலையில் இன்று அன்னமய்யா பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மொபைல் ஆப்பை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து ஆப்பின் சிறப்பம்சங்கள், பயன்பாடு குறித்து ஜியோ நிறுவன அதிகாரிகள் பவர் பாயிண்ட் மூலம் விளக்கினர்.

தடையற்ற சேவை

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய மொபைல் ஆப் பற்றி பேசிய சுப்பா ரெட்டி, பக்தர்களின் அனைத்து விதமான எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஒரே ஆப்பாக திகழும். தடையற்ற தகவல் தொடர்பை பெற முடியும். திருமலையில் நடக்கும் தினசரி நிகழ்வுகள், முக்கிய விழாக்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

என்னென்ன வசதிகள்?

திருமலையில் தங்கும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக காணிக்கை செலுத்தும் வகையில் இ-உண்டியல் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள கோயில்கள், முக்கிய இடங்கள், தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம். SVBC-ன் நேரலை நிகழ்வுகளையும் இந்த ஆப் மூலம் பார்க்கலாம் எனக் கூறினார்.

கைகொடுத்த ஜியோ

பின்னர் தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கூறுகையில், பக்தர்களுக்கான டிஜிட்டல் கேட்வே போல செயல்படும். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜியோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டோம். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது. பக்தர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரலை நிகழ்வுகள்

உடனுக்குடன் தகவல்கள் வெளியிடப்படும். முக்கியமான நிகழ்வுகள் நோட்டிபிகேஷன் மூலம் கிடைக்கும். திருமலை கோயிலில் நடக்கும் நிகழ்வுகள் பலவற்றை நேரலையில் காணலாம். ஏழுமலையான் புகைப்படங்கள், வீடியோக்கள், ரிங்டோன்கள், வால் பேப்பர் போன்றவற்றை ஆப் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வழிகாட்டுதல்கள்

திருமலையில் பக்தர்கள் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது? உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் பெறலாம். திருப்பதி தேவஸ்தானத்தின் மொபைல் ஆப்பை பயன்படுத்துவது உலகத் தரம் வாய்ந்த அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.