சென்னை: சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிப்பின்போது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 பேரை தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று (ஜன.27) காலை அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது.
அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கிய பிரியாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டிடத்தை இடிக்கும் பணிகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜேசிபி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன்படி ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகரன், ஜேசிபி இயந்திர ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கட்டிடத்தின் உரிமையாளர், பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் தேடி வருகின்றனர்.