ஜெய்பூர்: தனது அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுக்கும் அதிகாரம் அளிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் செல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் நடைபெறும் பகவான் ஸ்ரீதேவநாராயணனின் அவதார விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். அங்கு மலசெரியில் கூட்டத்தினரிடம் பேசிய பிரதமர் மோடி, “கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளாக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள புறக்கணிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க நாடு முயற்சி எடுத்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மந்திரத்துடன் நாங்கள் செயல்படுகிறோம்.
இந்தியா என்பது சாதாரண ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அல்ல. அது நமது நாகரிகம், கலாச்சாரம், ஒற்றுமை, திறன்களின் வெளிப்பாடாகும். சமூக அதிகாரம் என்பது இந்தியாவின் ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாற்று பயணத்தில் பெரியப் பங்கு வகித்துள்ளது.
நாம் அனைவரும் நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வோம். அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியேறி நாட்டினை முன்னேறச் செய்ய நமது கடமைகளை நினைவில் கொள்வோம்” என்றார் பிரதமர் மோடி.