கடந்த சில மாதங்களுக்கு ஊடகங்களில் டாக் ஆஃப் தி டவுன் ஆக இருந்த பெயர் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான். அதாவது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் ரசிகர் மன்றத்தை அரசியல் காட்சியாக மாற்ற முயற்சி செய்தததாகவும், தனது தந்தையின் நடவடிக்கை விஜய்க்கு பிடிக்காததால் இருவருக்குமிடையே பிரச்சனை என்றும் கூறப்பட்டது. தந்தை-மகன் உறவில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான தெளிவான விளக்கத்தை விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விஜய்க்கும், தனக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதை சந்திரசேகர் இந்த பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த பேட்டியில் விஜய் குறித்து அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாக்களை தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் விஜய்க்கு அப்படியில்லை. விஜய்க்கு அம்மாவை விட என்னைதான் ரொம்ப பிடிக்கும், ஆனால் நாங்கள் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டோம். நானும் விஜய்யும் அவ்வளவாக பேசமாட்டோம், எங்களுக்குள் இருக்கும் பாசத்தையும் நாங்கள் ஒருபோதும் வெளிகாட்டமாட்டோம். என் மகன் இன்றுவரை எனக்கு ஒரு குழந்தை போல தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மற்ற தந்தை-மகன் போல எங்களது உறவும் நிலையாக இருக்கிறது என்பதை கூறி தங்களது உறவை பற்றி எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
மேலும் பேசியவர், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தை பார்த்து ரசித்ததாகவும், அதில் விஜய் பேசிய வசனத்தை ரசித்ததாகவும் கூறினார். எல்லோர் வாழ்க்கையையும் போலவே எங்கள் தந்தை – மகன் உறவிலும் நிறைய ஏற்ற இறக்கங்கள் வந்தது, இருந்தபோதிலும் நாங்கள் இருவரும் சமரசமாக தான் இருந்து வருகிறோம் என்று கூறினார். விஜய் மீது எனக்கு முழு அன்பும் இருக்கிறது, அவருக்கு பிறகு தான் மற்றவர்கள் மீது எனக்கு பாசம் இருக்கிறது. விஜய்யை நான் எந்தவொரு இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து இல்லை, அதேபோல என் மனைவியும் விஜய்யை விட்டுக்கொடுத்தது இல்லை என்று கூறியுள்ளார்.