ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று நிறைவு: மக்களவைத் தேர்தலில் மாற்றம் நிகழுமா?

சுமார் ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்று வரும் ராகுல் காந்தியின் நடை பயணம்
காங்கிரஸ்
இழந்த வாக்கு வங்கியை மீட்டுக் கொடுக்கும் என்றும், பொது வாக்காளர்களை காங்கிரஸ் நோக்கி திருப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த பயணம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து ஸ்ரீநகரை எட்டியுள்ளது. 3,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ள இந்த நடை பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள், அறிவியல் அறிஞர்கள், திரைத்துறை, விளையாட்டுத்துறை சாதனையாளர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் தினந்தோறும் நடை பயணத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் ஐந்து மாதங்களாக நாடு முழுவதும் கவனம் பெற்ற நடை பயணம் இன்று (ஜனவரி 30) நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது யாத்திரையை அவர் நிறைவு செய்கிறார். இதைத் தொடர்ந்து எஸ்.கே. மைதானத்தில் பிரமாண்ட நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

ஈரோடு கிழக்கு – எடப்பாடி எடுத்த சர்வே: இது மட்டும் நடந்தா லைஃப் டைம் செட்டில்மென்ட்!

இந்த நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். அத்துடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.