கராச்சி: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரிலிருந்து சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள பெல்லா நகரில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால், பேருந்தின் உள்ளே இருந்த பயணிகளில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து பெலாநகர் காவல் துறை உதவி ஆணையர் ஹம்சா நதீம் கூறுகையில், “பெண்கள், குழந்தைகள் உட்பட 40 உடல்கள் கைப்பற்றப்பட்டன. படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பேருந்து மிக வேகமாக சென்றதால்இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டுப்பாட்டை இழந்தபேருந்து மேம்பால தடுப்பை உடைத்து பள்ளத்தில் விழுந்ததுள்ளது. உடனே தீ பற்றியுள்ளது. இதனால் பயணிகளின் உடல்அடையாளம் தெரியாத வகையில்எரிந்துள்ளது. தற்போது அவர்களது உடல் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. பரிசோதனை அடிப்படையில் அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மற்றொரு விபத்து
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கோட் பகுதியில் 30 சிறுவர்கள் பயணித்த சுற்றுலா படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இதில் மதரசாவை சேர்ந்த 10 சிறுவர்கள் உயிரிழந்தனர்.