கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பைக் ரேஸ் ஓட்டிய இளைஞரும், அவரது பைக் மோதி பெண் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பொது இடங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. அதனால் பல விபத்துகளும் ஏற்படுகின்றன. புதிய வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வருகையால் சட்ட விரோத பைக் ரேஸ்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், திருவனந்தபுரத்தில் கோவளம் பைபாஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது, திருவளம் பகுதியை சேர்ந்த 53 வயது பெண் சிந்து சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவர் பை பாஸ் சாலையை கடக்க முயற்சித்த போது, ரேஸில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த பைக் மோதியது. அதனால் தூக்கி வீசப்பட்ட சிந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பைக்கை ஓட்டி வந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in