75ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகின்றது.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரமடைந்தது.
75ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது தேசிய சுதந்திர தின வைபவம் ஆகும்.
75 ஆவது சுதந்திர தினத்தை எதிர்வரும் 25 வருடங்களுக்கான புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துடன் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
நமோ…நமோ… தாயே நூற்றாண்டிக்கான முதற்படி என்னும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகின்றது.
சுதந்திர சதுக்கத்தில் உள்ள தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்காவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்துவதுடன் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமையப்பெற்றிருக்கும் தேசிய வீரர்களின் உருவச்சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்படும்.
இன்றைய பிரதான நிகழ்வின் அணிவகுப்பில் ஆறாயிரத்திற்கும் அதிகமான முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.அத்துடன் பிரதமர். சபாநாயகர், முப்படைகளின் தளபதிகள் உட்பட உள்நாட்டுஇ வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்..
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், மாலைதீவு, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார, கல்வி அமைச்சர்கள், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் ஆகியோர் வெளிநாட்டுச் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கின்றமை விஷேட அம்சமாகும்.
இலங்கையின் வரலாற்றில் சுதந்திர தின பிரதான நிகழ்வு ஒன்றில் வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கு கொண்டு பார்வையிடுவது இதுவே முதற்தடவையாகும். இது இலங்கை உலக நாடுகளுடன் கொண்டுள்ள சிறந்த நட்புறவையும் பலத்தையும் காண்பிக்கின்றது.
சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர்இ சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சுமார் 6,420 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 3,319 பேரும், கடற்படையைச் சேர்ந்த 867 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 695 பேரும் 336 பொலிஸார் மற்றும் 220 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 437 பேரும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 546 அடங்குவர்.சுதந்திர தின பிரதான நிகழ்வை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடல் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசிய கொடிகள் மற்றும் வர்ண கொடிகள் பறக்கவிடப்பட்டு அந்தப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றன.
அத்துடன் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலை 8.15க்கு ஜனாதிபதியின் வருகையை தொடர்ந்து சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
தேசிய கொடியை சம்பிரதாய முறையில் ஏற்றி ஜனாதிபதி சுதந்திர தின பிரதான நிகழ்வை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் ஜனாதிபதிக்கு மரியாதை நிமிர்த்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ணஇ பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரட்ண ஆகியோரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற படை வீரர்களும் விசேட வாகனத்தில் அனுபவித்து செல்ல உள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் பௌத்த சமய நிகழ்வுகள் காலை 6.20ற்கு பொல்வத்த தர்மகீர்த்தி ராமய விகாரையில் ஆரம்பமாகவுள்ளது. இந்து சமய நிகழ்வுகள் திருகோணமலை கோணேஸ்வரம் கோவில் இடம்பெறும். கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இஸ்லாம் சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மருதானையில் உள்ள பத்திமா ஆலயத்தில் கத்தோலிக்க சமய நிகழ்வுகளும் காலிமுகத் திடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியிலும் பல்வேறு கலாசார மற்றும் சமய நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன