எருது விடும் விழாவுக்கு அனுமதி: ஜிகே வாசன் கோரிக்கை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடத்தப்படுவது வழக்கம்.

அதேபோல், இதே போல், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் எருதுவிடும் விழாக்களில், காளைகளின் கொம்புகளில் பரிசுத்தொகையைக் கட்டி ஓட விடுவர்.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் விழாவையொட்டி, வேப்பனப்பள்ளி பகுதிகளில் நடந்த எருதுவிடும் விழாக்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாததால் காளைகள் முட்டியதில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனால் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி வழங்குவதில், மாவட்ட நிர்வாகம் கடும் நிபந்தனைகளை விதித்தது.

இதனிடையே, சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவை நடத்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி இருந்தனர். இதற்கான அனுமதி அரசிதழில் வெளியானது. ஆனால், இறுதியாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்களும், பொதுமக்களும் கிருஷ்ணகிரி – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தியும், கற்களை கொட்டியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கக் கோரி நடைபெற்ற அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவிற்கு அனுமதிகேட்டு அப்பகுதி மக்கள் விண்ணப்பித்து இருந்தனர். அரசிடம் இருந்து அதற்கான அனுமதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பூர்வாங்க பணியில் அரசு அதிகாரிகளினால் ஏற்பட்ட காலதாமத்தால் மக்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளும் அத்துமீறல்களும் ஏற்பட்டு அதனால் சாலை மறியல், கல்வீச்சு, தடியடி என்று விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறி இருக்கிறது.

இச்செயல் மிகவும் வருந்ததக்கது. வருங்காலங்களில் இதுபோல் ஒரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு தமிழக அரசு மக்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து எருதுவிடும் நிகழ்ச்சி உரிய காலத்தில், உரிய நேரத்தில் பாதுகாப்பாக நடைபெற உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அனுமதி வழங்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.