காவல்துறையினர் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு 22 சிறுவர்கள் பைக் ஓட்டியதை கண்டறிந்து அவர்கள் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது 18 வயது நிரம்பாத சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் டிவிஎஸ் 50 போன்ற இருசக்கர வாகனங்களை வீட்டிற்கு அருகே ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது கியர் பைக்குகள் சிறுவர்கள் நெரிசலான சாலையிலேயே ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து நேரிட்டு சாலையில் செல்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் என்று இரண்டு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் தஸ்னா பகுதியில் ஆஷிஷ் என்ற 11ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பனுடன் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினான்.
சாலையின் எதிர் திசையில் சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கை ஓட்டிய ஆஷிஷ் உயிரிழந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் காசியாபாத் போலீசார் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 18 வயது பூர்த்தியாகாத 22 சிறுவர்கள் பைக் ஓட்டியதை கண்டறிந்தனர். அவர்களை பிடித்த போலீசார், சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த அவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
newstm.in