14 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி: 13-ந் தேதி தொடங்குகிறது

சென்னை,

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) ஆதரவுடன் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டி நடைபெறுகிறது. இதன் தகுதி சுற்று ஆட்டங்கள் முந்தைய நாளான 12-ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டியில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்து இருக்கின்றனர். இதில் முதல் நிலை வீரராக உலக தரவரிசையில் 110-வது இடத்தில் இருக்கும் சீனதைபேயை சேர்ந்த சென் சியுன்சின் உள்ளார். தரவரிசையில் 154-வது இடத்தில் இருக்கும் பெனிஸ்டன் ரையான் (இங்கிலாந்து), 163-வது இடத்தில் உள்ள ஜேம்ஸ் டக்வொர்த் (ஆஸ்திரேலியா), 19 வயது லூகா நார்டி (இத்தாலி), டிமிடார் குஸ்மனோவ் (பல்கேரியா), செபாஸ்டியன் (ஆஸ்திரியா), மிகைல் குகுஷ்கின் (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

ஒற்றையர் பிரிவில் பிரதான சுற்றில் 32 வீரர்கள் இடம் பெறுவார்கள். இதில் 23 வீரர்கள் நேரடியாக களம் காணுவார்கள். 3 வீரர்கள் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பிரதான சுற்றில் ஆடும் வாய்ப்பை பெறுவார்கள். தகுதி சுற்றில் விளையாடி 6 வீரர்கள் பிரதான சுற்றை எட்டுவார்கள். இரட்டையர் பிரிவில் பிரதான சுற்றில் 16 ஜோடிகள் இடம் பிடிப்பார்கள். இந்திய தரப்பில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுகிறார்கள். ‘வைல்டு கார்டு’ சலுகை யாருக்கு என்பது கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும்.

இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 100 தரவரிசை புள்ளியுடன் ரூ.14.47 லட்சம் பரிசாக கிடைக்கும். 2-வது இடத்தை பெறுபவருக்கு 60 தரவரிசை புள்ளியுடன் ரூ.8½ லட்சம் பரிசாக வழங்கப்படும். தினசரி போட்டிகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த போட்டியை காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2019-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் கோரென்டின் மோடெட் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் அடுத்த சேலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் பெங்களூரு மற்றும் புனேவில் நடக்க இருக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.