புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. ஆனால், 27 நீதிபதிகள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. இவர்கள் 5 பேரையும் தேர்வு செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு, நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் அனுப்பி வைத்தது.
ஆனால், அவர்கள் நியமனத் துக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஆனது. இதுகுறித்து தலைமை நீதிபதியும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து 5 நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக கடந்த 4-ம் தேதி மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்தார். இதையடுத்து பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கொலீஜியம் பரிந்துரை: இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 2 இடங்களுக்கும் 2 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி 2 பேர் நியமிக்கப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை முழு அளவை எட்டும்.