குபேர மூலையில் அதிமுக… ஒருபடி மேலே போயாச்சு; ஈரோடு கிழக்கில் சுவாரஸியம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். அதிமுகவில் நிலவிய உட்கட்சி பூசலால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் வேட்பாளர்களை நிறுத்தி அதிரவிட்டனர். அதன்பிறகு பாஜக வந்து சமரசம் செய்ய முயற்சித்தது. ஆனால் எடுபடவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றம் சமரசம் செய்து வைத்தது.

ஓபிஎஸ் தரப்பு வாபஸ்

இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவிக்க, கட்சியின் நலனுக்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரத்தை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய நிலையில், வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கினார்.

வேட்புமனு தாக்கல் கடைசி நாள்

இதன்மூலம் எடப்பாடி தரப்பிற்கு இரட்டை இலை என்றாகிவிட்டது. இது கிட்டதட்ட கட்சியை அவர் வசமாக்கியதை போலத் தான் பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் ஓபிஎஸ் மீண்டும் சீரியப் பாயலாம் என்கின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இதற்கிடையில் இன்று காலை அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன் தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

சாமி தரிசனம்

ஈரோடு மணல்மேடு பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினர். அப்போது முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஈரோடு இடைத்தேர்தலில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் குபேர மூலையில் இருந்து தொடங்கியுள்ளது.

குபேர மூலையில் தொடக்கம்

குபேர மூலை என்றாலே செல்வம் தரும். வெற்றியைத் தரும். இதிலிருந்தே நாங்கள் வெற்றி இலக்கை அடைந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்கள் கூறும் போது எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும்.

மிகப்பெரிய வெற்றி

திண்டுக்கல், மதுரையில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி அடைந்தது போல் ஈரோடு இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் தென்னரசு மிகப்பெரிய வெற்றி அடைவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றனர். நாளை மறுநாள் ஒன்பதாம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது. ஆள் பிடிக்கும் கூட்டத்தை விட நமது அறிமுக கூட்ட விழாவில் ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மீண்டும் எடப்பாடி ஆட்சி

அதைக் கண்டு மற்ற கட்சியினர் மிரட்சி அடைவார்கள். நாங்கள் வேட்பாளரை அறிவிக்கும் போதே வெற்றி உறுதியாகிவிட்டது. செல்லும் இடமெங்கும் அதிமுக வேட்பாளருக்கு மிகப்பெரிய ஆதரவை பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். எங்களது வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி அடைவார். இந்த வெற்றி மூலம் எடப்பாடி ஆட்சி மீண்டும் மலரும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.